கோவையில் யூரியா மூட்டை கடத்தலுக்கு உதவிய அதிகாரிகளை தப்ப வைக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு…

கோவை மதுக்கரை பகுதியில் விவசாயிகளுக்கு மத்திய அரசு மானிய விலையில் வழங்கும் யூரியா உரத்தை டன் கணக்கில் கடத்தி, ரகசியகுடோனில் திரவமாக மாற்றி கேரளாவுக்குக் கடத்த முயன்றதாக புகார் வந்தது.

மதுக்கரை வழுக்குபாறை தமனா தோட்டம் மற்றும் ரொட்டி கவுண்டன் புதூரில் சோதனை நடந்தது. இதில் 43 லட்ச ரூபாய் மதிப்பிலான 128 டன் எடையிலான யூரியா மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக இங்கே யூரியா மூட்டைகள் கடத்தி வந்து பதுக்கி வைத்து பேக்டரியில் குவித்து ஆயிலாக மாற்றி கேரளா கொண்டு செயல்பட்டு வருவதாக தெரியவந்தது.

இந்த முறைகேடு தொடர்பாக கேரள மாநிலத்தை சேர்ந்த ஆசிப் அலி மற்றும் லாரி டிரைவர் மீது உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த உரத்தை பிளைவுட் நிறுவனங்களுக்கு பேஸ்ட் தயாரிக்க ஆயில் வடிவத்திற்கு மாற்றி கடத்தியுள்ளதாக தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேளாண்மை துறையினர் யூரியா மூட்டைகளில் இருந்து யூரியா மற்றும் ஆயில் சாம்பிள் எடுத்து சேலத்தில் உள்ள வேளாண் ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளனர்.

விரைவில் ஆய்வு முடிவுகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கடத்தல் மோசடியின் பின்னணியை முறையாக விசாரிக்காமல் குறிப்பாக உதவிய அதிகாரிகளை தப்ப வைக்கும் நோக்கத்தில் போலீசார் செயல்படுவதாக விவசாயிகள் குற்றசாட்டு தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக பேக்டரி அமைத்து முறைகேடாக யூரியா கொண்டு வந்துள்ளனர்.

இதுவரை எவ்வளவு டன் யூரியா கடத்தி வரப்பட்டது, அதன் பின்னணி என்ன எங்கேயிருந்து இந்த மூட்டைகள் வந்தது என கண்டறியவில்லை. யூரியா பேக்கிங், சப்ளை செய்த இடம் வேளாண் அதிகாரிகளுக்கு தெரிந்தும் மறைக்கிறார்கள் மேலும் யூரியா பேக்டரிக்கு மாசு கட்டுபாட்டு வாரியம் எப்படி அனுமதி வழங்கியது, மின் இணைப்பு வழங்கியவர்கள் யார், உள்ளாட்சியில் எப்படி அனுமதி வழங்கப்பட்டது என விசாரிக்கவில்லை.

பெயருக்கு வழக்கு போட்டு டிரைவர், சப்ளையர் மீது நடவடிக்கை எடுத்தால் போதாது. இதன் பின்னணியில் பெரும் மோசடி நடந்துள்ளது. வேளாண் துறையினர் மட்டுமின்றி சம்பந்தப்பட்ட பல்வேறு அரசு துறையினரை தப்ப வைக்க முயற்சிக்க கூடாது என விவசாயிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக கோவை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் தமிழ்செல்வி கூறுகையில், “ யூரியா பேக்கிங் வைத்து அதை சப்ளை செய்தவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். எங்கள் தரப்பில் புகார் தந்திருக்கிறோம் போலீசார் தான் விசாரித்து கண்டறிய வேண்டும்.

யூரியா பேக்கிங்கில் மானியம் என போட்டிருக்கிறது. ஆனால் இது எங்கேயிருந்து வந்தது என தெரியவில்லை. யூரியாவில் உள்ள வேப்ப எண்ணெய் எடுத்து விட்டு அந்த ஆயிலை கேரளாவிற்கு சப்ளை செய்வதாக தெரிகிறது. பிளைவுட் பேக்டரியில் இந்த ஆயிலை பார்மால்டிஹைடு கலந்து பயன்படுத்தியிருக்கலாம். ” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *