கோவையில் வீட்டு மனை பட்டா கேட்டு மடிபிச்சை எடுத்து போராட்டம்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் இன்று நடந்தது.

கோவை மாவட்டம் சூலூர் தாலுகா செம்மாண்டம்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், செம்மாண்டம்பாளையத்தில் உள்ள மாகாளியம்மன் கோயிலுக்கு சொந்தமாக 33 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில் உள்ள தென்னந்தோப்பில் தேங்காய்கள் பறித்து விற்பனை செய்ய ஏலம் விடப்படுவது வழக்கம்.

இதன்மூலம், கோயிலுக்கு கடந்த காலங்களில் ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வரை வருமானம் கிடைத்தது. தற்போது ரூ. 19 லட்சத்திற்கு மட்டுமே தென்னந்தோப்பு ஏலம் விடப்பட்டு உள்ளது. எனவே இதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

பீளமேடு பகுதி பொதுமக்கள் கவுன்சிலர் சித்ரா வெள்ளிங்கிரி தலைமையில் மனு அளித்தனர். மனுவில், பீளமேடு போலீஸ் நிலையம் அருகே 288 மீட்டர் தூரத்திற்கு தார் சாலை அமைக்கப்படாமல் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் தார் சாலை அமைக்க அரசு துறைகள் தடையின்மை சான்றிதழ் வழங்காமல் உள்ளனர். எனவே விரைந்து தடையின்மை சான்றிதழ் வழங்க வேண்டும்.

இரவு நேரங்களில் வெளியூர் செல்லும் பயணிகள் அவினாசி ரோடு, திருச்சி ரோடு உள்ளிட்டட இடங்களில் பஸ் மற்றும் ஆம்னி பஸ்களுக்காக காத்திருக்கின்றனர். ஆனால் அந்த பகுதிகளில் போதிய கழிப்பறை வசதி இல்லை. எனவே, பயணிகளின் நலன் கருதி தற்காலிக அல்லது நிரந்தர கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று இருந்தது.

கோவை கோர்ட் ரவுண்டானாவில் அம்பேத்கர் சிலை அமைக்க கோரி அம்பேத்கர் சிலையுடன் வந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மனு அளித்தனர். பின்னர், அந்த சிலையை ரவுண்டானாவில் வைக்க முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்தி நிறுத்தி மனு மட்டும் அளிக்கும் படி அறிவுறுத்தினர்.

மேலும், அம்பேத்கர் மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர் ரங்கநாதன், தெற்கு மண்டலம் 99-வது வார்டு ஷேர்மொய்தீன் சாய்பு வீதியில் ரோடு ஆக்கிரமிப்பு செய்துள்ள நிலையில் அங்கு அளவீடு செய்து ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என மனு அளித்தார். பொள்ளாச்சியை சேர்ந்த சரஸ்வதி என்பவர் தனது நிலத்தை சிலர் ஆக்கிரமித்து உள்ளதாக கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு: நிலவியது.

இதையடுத்து போலீசார் கலெக்டரிடம் மனு அளிக்கும் படி கூறி அவரை அழைத்து சென்றனர். வடவள்ளி விநாயகர் கோயில் வீதியை சேர்ந்த விஜயா உள்பட 20-க்கும் மேற்பட்டவர்கள் வீட்டுமனை பட்டா கோரி மடிப்பிச்சை எடுத்தப்படி மனு அளித்தனர்.

இதில், நெடுஞ்சாலை துறை விரிவாக்கத்திற்காக நாங்கள் வசித்து வந்த வீடு இடிக்கப்பட்டது. அதற்கு பதிலாக மாற்றிடம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மதுக்கரை சுகுணாபுரம் பிள்ளையார் புரத்தில் குடியிருப்பு மக்களுக்கு தேவையான அடிப்படை வசதி செய்து தர வேண்டும் எனவும், நிரந்தர புறக்காவல்நிலையம் அமைக்க வலியுறுத்தியும் மனு அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *