2.50 கோடி ரூபாய் கேட்டு மிரட்டல்; பைனான்சியர்கள் மீது புகார்
கோவை சிட்கோ பகுதியைச் சேர்ந்தவர் செங்கதிர் பிரகாஷ் (46) தொழிலதிபர். இவருக்கு சொந்தமாக குறிச்சி பகுதியில் திருமண மண்டபம், பேக்கரி உள்ளிட்ட வணிக வளாகங்கள் அடங்கிய சுமார் ரூ.30 கோடி மதிப்பிலான சொத்து உள்ளது
தொழில் தேவை மற்றும் வங்கி கடன் பெறுவதற்காக, தனது நண்பரான உடையாம்பாளையத்தைச் சேர்ந்த தியாகு (47) என்பவரது பெயருக்கு மேற்படி சொத்தை கடந்த 2003-ம் ஆண்டு கிரையம் செய்து கொடுத்து சாய்பாபா காலனியில் உள்ள தனியார் வங்கியில் ரூ.5 கோடி கடன் பெற்றிருந்தனர்.
இதற்கிடையே ஏற்பட்ட தொழில் நெருக்கடி காரணமாக நாமக்கல்லைச் சேர்ந்த பைனான்சியர் மற்றும் அவரது ஏஜெண்டை அணுகி, ரூ.5.31 கோடியை வட்டிக்கு வாங்கி உள்ளார். தொடர்ந்து வங்கிக் கடனை அடைத்துள்ளனர். இதற்காக கையொப்பமிட்ட வெற்று காசோலைகள், புரோநோட்டுகள் மற்றும் வெற்று முத்திரை தாள்கள் ஆகியவற்றை அவர்கள் பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த 12-ம் தேதி வங்கியில் அசல் ஆவணங்களை திரும்பப் பெறுவதற்காக செங்கதிர் பிரகாஷ் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த ஏஜெண்ட் மற்றும் அவரது ஆட்கள், கடன் கொடுத்த 49 நாட்களுக்கு மட்டும் வட்டியாக ரூ.2 கோடியே 54 லட்சத்து 40 ஆயிரம் தரவேண்டும் எனக்கூறி தகராறு செய்துள்ளனர்.
மேலும் ரூ.30 கோடி சொத்துக்கான அசல் பத்திரங்களை கேட்டு மிரட்டி உள்ளனர். இதையடுத்து செங்கதிர் பிரகாஷ் மற்றும் தியாகு ஆகியோர் கந்துவட்டி கேட்டு மிரட்டி சொத்தை அபகரிக்க முயலும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
