அலுவலகத்தில் அதிகாரிகளின் செக்ஸ் டார்ச்சர்: கோவை சமூக நலத்துறையினர் விசாரணை…!
கோவை மாவட்டத்தில் பணிபுரியும் இடங்களில் பெண்கள் எதிர் கொள்ளும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக புகார் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பாலியல் துன்புறுத்தல் தடைச் சட்டம் 2013ம் ஆண்டு ஒன்றிய அரசினால் ஏற்படுத்தப்பட்டது. இந்த சட்டத்தின்படி 10 நபர்களுக்கு மேல் பணிபுரியும் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் அதன் கிளை நிறுவனங்கள் என அனைத்திலும் தனித்தனியான உள் புகார் குழுக்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
இது 5 உறுப்பினர்களைக் கொண்டு இருக்க வேண்டும். உள்புகார் குழு தலைவராக பெண் அலுவலர் நியமிக்க வேண்டும். மேலும் இக்குழுவில் 50 சதவீத உறுப்பினர்கள் பெண்களாகவும் மற்றும் ஒரு உறுப்பினர் பாலியல் துன்புறுத்தல் தடைச் சட்டம் பற்றி நன்கு அறிந்தவராகவோ, தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவராகவோ இருத்தல் வேண்டும்.
இதுவரை உள் புகார் குழு அமைக்காத நிறுவனங்கள் உடனடியாக உள்புகார் குழு அமைத்து அத்தகவல்களை மாவட்ட சமூக நல அலுவலர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
உள்புகார் குழு அமைக்கப்படாத நிறுவனங்களின் மீது பணியிடங்களில் பெண்கள் எதிர் கொள்ளும் பாலியல் துன்புறுத்தல் தடைச் சட்டம் 2013ன் கீழ் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மாவட்ட அளவில் பெண்களுக்கான பாலியல் தொல்லை தொடர்பாக புகார்கள் விசாகா கமிட்டி மற்றும் சமூக நலத்துறை மூலமாக பெறப்பட்டு வருகிறது.
சமீபத்தில் கோவையில் இரண்டு நிறுவனங்களில் பெண்களுக்கு பாவியல் தொந்தரவு வழங்கப்பட்டதாக புகார் பெறப்பட்டது. மாவட்ட நிர்வாகத்தினர் நேரடி பார்வைக்கு இந்த புகார் சென்றதை தொடர்ந்து விசாரணை துவக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பான விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. புகார் தெரிவிக்கப்பட்ட நபர்களிடம் அதிகாரிகள் குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அலுவலக வட்டாரங்களில் அதிகாரத்தை பயன்படுத்தி கீழ் மட்ட அளவில் பணி செய்யும் பெண் ஊழியர்களை தங்களது ஆசைக்கு இணங்க வைக்க மிரட்டும் நபர்கள் கணிசமாக இருப்பதாக தெரிகிறது. தங்களை அனுசரிக்காவிட்டால் அதிக வேலை, தேவையில்லாத தொந்தரவு தருவதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் கடுமையான மிரட்டல் வார்த்தைகளையும் சிலர் பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்த நபர்கள் தொடர்பாகவும் புகார்கள் குவிந்து வருகிறது. மாவட்ட அளவில் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசு, தனியார் அலுவலகங்களில் அதிகாரத்தை பயன்படுத்தி லீலை செய்யும் ஆபீசர்கள் மீது மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுக்கும் என பெண்கள் எதிர்பார்த்துள்ளனர்.
